Sunday, February 7, 2016

தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டால் அதற்கு மர்ம மரணம் பெயர் சூட்டுவதா ?

தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை செய்யப்பட்டால் அதற்கு மர்ம மரணம் பெயர் சூட்டுவதா ?
நீதி விசாரணை நடத்த இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது !
------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் மர்மமான முறையில் மரணமடையும் தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5000 என்கிறார் காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு கூடுதல் இயக்குநர் திரு. ராஜேஷ் தாஸ் அவர்கள். ஆனால் கடந்த 2015 ஆண்டு மட்டும் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 11 (11/5000) அதாவது 0.22%  மட்டுமே. முழுமையாக ஒரு சதவிகிதம் கூட இல்லை. 

இப்படிப்பட்ட சூழலில் தான் கடந்த ஆண்டு சட்ட சபையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆனவக்கொலைகள் ஏதும் ஏவப்படவில்லை என்றும் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் வாய்கூசாமல் ஆனவப் பொய் பேசினார். காவல்துறையின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவின் கணக்குப்படி ஒரு ஆண்டிற்கு சராசரியாக 5000 கொலைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றால், மீதம் உள்ள பதிவு செய்யப்படாத கொலைகள் எவ்வளவு உள்ளதென்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதன் மூலம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறது என்பது நமக்கு தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. 

கணக்குப்படி சராசரியாக 5000 கொலை வழக்குகளில் 45 சதவிகிதம், அதாவது 2250 வழக்குகள் வயிற்றுவலிக்காகவும் மற்றும் இதர நோய்களுக்காகவும் தற்கொலை செய்துகொண்டார்கள் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு வினோதமான வழக்கு பதிவுகள் தமிழகத்தில் மட்டும் தான் நடக்க முடியும்.
எனவே தமிழக அரசு, இப்பிரச்சனையின் உண்மை குறித்து நீதி விசாரணை நடத்தி அவற்றை உலகிற்கு தெரியபடுத்த வேண்டுமென்றும், உண்மையான குற்றவாளிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் மூலம் வழக்கு பதிவு செய்து தண்டனை வாங்கித்தரவும், ஆனவக்கொலைகளை கட்டுப்படுத்தவும் இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது !

கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!
ஜெய்பீம்!

இங்கனம்,
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.