ஜெய்பீம் !
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து இன்று 31.08.2015 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கட்சி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு கலந்து கொண்டு எனது கண்டனத்தை பதிவு செய்தேன். இதில் இருபதுக்கும் மேற்பட்டஅமைப்புகள் கலந்துகொண்டது. முடிவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சேஷ சமுத்திரம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து விளக்கி அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீடுகள் குறித்தும் இவன்முறைக்கு சம்பத்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதன் விவரம்.....
கோரிக்கை மனு
-------------------------
பெறுதல் : உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம்.
பொருள் : விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திட்டமிட்டு நடைபெற்ற ஜாதிவெறி வன்முறையாட்டம் – தொடர்பாக.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம் !
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திட்டமிட்டு நடைபெற்ற ஜாதிவெறி வன்முறையாட்டம் குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த ஜாதிவெறி வன்முறையாட்டம் குறித்தும் அது நடைபெற்ற விதம் குறித்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இந்த வன்முறை சம்பவம் குறித்து தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவது இந்திய குடியரசு கட்சியின் அடிப்படை உரிமை மற்றும் கடமையாக கருதுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற இருந்த தேரோட்டம், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வரக்கூடாது என்று அதே ஊரில் வசிக்கும் ஒரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 2012 ஆண்டு முதல் (கடந்த 3 ஆண்டுகளாக) திருவிழாவே நடக்கவில்லை. இதிலிருந்தே தாழ்த்தப்பட்ட மக்கள் எவ்வளவு அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு அங்கு வாழ்த்து வருகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக நமக்கு விளங்குகிறது.
மீண்டும் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்கிற அடிப்படை உரிமையிலும் அதில் எவ்வித அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்கிற நல்ல எண்ணத்தின் அடிப்படையிலும் கள்ளக்குறிச்சி அரசு வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடந்ததை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் ஒப்புதல் பெற்றே 16.08.2015 அன்று தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இது அனைவரும் அறிந்ததே!
ஆனால் நடந்தது என்ன ? திருவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஆனால் திருவிழா நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்காக புதிய தேர் ஒன்று செய்யப்பட்டது ஆனால் தேரோட்டம் நடக்கவில்லை மாறாக தேர் முழுவதும் தீயால் எரிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் ஆவலோடு திருவிழாவை கொண்டாட காத்திருந்தனர் ஆனால் அவர்கள் கொலைவெறியோடு தாக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டத்தை வரவேற்க காத்திருந்தது ஆனால் அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீயால் எரிக்கப்பட்டுள்ளது.
இதுதான் அரசு அதிகாரிகளின் பேச்சு வார்த்தையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் பரிசா ? என்று நாடு முழுவதும் இச்சம்பவம் குறித்து மக்கள் இன்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசின் மீதும் அரசு அதிகார்களின் மீதும் உள்ள நம்பகத்தன்மை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குறைந்து விட்டது. இனி எப்போதுமே அரசையும் அரசு அதிகாரிகளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் எக்காரணம் கொண்டும் நம்பிவிடக்கூடாது என்று உங்கள் நடவடிக்கை தாழ்த்தப்பட்ட மக்களை சாட்டையால் அடித்தும், வயிற்றில் அடித்தும், வீட்டை கொளுத்தியும் சொல்லிவிட்டது. அதற்காக நாங்கள் உங்களுக்கு எங்கள் நன்றியை சொல்லிகொள்கிறோம்.
திருவிழாவின் போது வன்முறை நடக்க வாய்ப்புள்ளது என்று பேச்சுவார்த்தையின் போதே அதிகாரிகளால் உணர்ந்திருக்க முடிந்திருக்கும் அதன் அடிப்படையில் திருவிழாவிற்கு அரசு தக்க பாதுகாப்பு கொடுத்திருக்க முடியும். அப்படி சரியான பாதுகாப்பு அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கும் பட்சத்தில், இந்த வன்முறை குறித்து நாம் விவாதிக்கவேண்டிய சூழ்நிலை இன்று வந்திருக்காது.
நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் குறிப்பாக பொருளாதாரத்திலும், அதிகாரத்திலும் மிகவும் பின் தங்கியே வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய தலையான பொறுப்பு ஜனநாயக அரசுக்கு உள்ளது என்பதை வாக்களித்த நாங்கள் உணர்கிறோம். அதன் அடிப்படையில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடந்த வன்முறைக்கும் அதனால் ஏற்ப்பட்ட பாதிப்புகளுக்கும் அரசு பொறுப்பேற்று தீயால் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக அரசே புதிய வீடு ஒன்றை அவர்களுக்கு கட்டித்தர வேண்டியும், புதிய வீடு கட்டி முடிக்கும் வரை ஒரு தற்காலிக குடியிருப்பை வழங்க வேண்டியும், எரிக்கப்பட்ட வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்ததையடுத்து அவற்றை கணக்கில் கொண்டு புதிய பொருட்களை கொடுக்க வேண்டியும், இதுவரை அவர்கள் சேமித்த பொருட்கள் மற்றும் பொருளாதாரம் அனைத்தும் எரிந்துவிட்டதையடுத்து இழப்பை ஈடுகட்ட வேண்டி குடும்பத்திற்கு தலா ரூபாய் 25,00,000/- (இருபத்தியைந்து லட்சம் மட்டும்) வழங்க வேண்டியும் மேலும் இவ்வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் இழப்பை ஈடுகட்டும் வகையில் உதவித்தகை வழங்க வேண்டியும், எரிக்கப்பட்ட தேருக்கு பதிலாக அரசே புதிய தேர் ஒன்றை மாரியம்மன் கோவிலுக்கு வழங்க வேண்டுமென்றும் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலே குறிப்பிட்ட அனைத்து இழப்பீடுகளையும் ஈடுகட்ட ஒரு இடைத்தேர்தலில் அரசால் செலவிடப்படும் தொகையை விட மிகவும் குறைவானதே என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
மேலும் இவன்முறைக்கு சம்பத்தப்பட்டவர்கள், இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள், சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கி தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
ஜெய்பீம்!
இங்கனம்
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
நகல் :-
1. மாண்புமிகு தமிழக முதலைச்சர் அவர்கள், தலைமைச்செயலகம், சென்னை.
2. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம், தலைமைச்செயலகம் சென்னை.
3. எஸ்.சி / எஸ்.டி கமிஷன், சென்னை / புதுடெல்லி.
4. மனித உரிமை ஆணையம், சென்னை.
5. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.
6. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம்.