Thursday, September 10, 2015

சேஷ சமுத்திரம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆதி திராவிடர் மக்களின் இந்து மதத்தை விட்டு வெளியேறும் முடிவை இந்திய குடியரசு கட்சி வரவேற்று பாராட்டுகிறது !

ஜெய்பீம் !


கடந்த 15.08.2015 இந்திய நாட்டின் 68-ஆம் ஆண்டு சுதந்திர தினம் அன்று இந்து மதக்கடவுளுக்காக நடத்தப்பட திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் ஆதி திராவிட மக்களின் வீடுகள் தீயால் எரிக்கப்பட்டது. மதம் என்பது ஒரு மனிதனின் அறிவை வளர்ப்பதற்கும் அவரது வாழ்வை மேம்படுத்துவதற்கும், சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் வளர்ப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர மதத்தில் இருப்பவர்களின் வீடுகளை எரிப்பதற்கும், சகோதரத்துவத்தை கெடுப்பதற்கும், வாழ்வை சீரழிப்பதற்க்கும், சமத்துவத்தை சீர்குலைப்பதற்க்கும் இருந்துவிடக்கூடாது.
இப்படி மனித குலத்தையும் சமூக ஒற்றுமையையும் சீரழிக்கக்கூடிய முகாந்திரம் இந்து மதத்தில் இருப்பதென்பது துரதிஷ்டமானது. மேலும் இந்து மதத்தின் பெயரால் செயல்படும் அமைப்புகள் இதுவரை சேஷ சமுத்திரம் வன்முறைக்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது இந்து மதம் சமூக ஒற்றுமையையும், சமத்துவத்தையும் காப்பதில் தோல்வியடைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக நாங்கள் உணர்கிறோம்.
ஒரு கெட்டது நடந்தால் உடனே ஒரு நல்லதும் நடக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். மேலும் “நமக்கென்று ஒரு தெளிவான பாதை (பௌத்தம்) இருக்கும் போது இந்து மதத்தை சீர் திருத்தும் சுமையை நாம் ஏன் தலையில் சுமக்க வேண்டும்” என்று அறிவுலக தந்தை பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அண்ணலின் அறிவுறுத்தலை பின்பற்றும் வகையில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் வசித்து வரும் ஆதி திராவிட மக்கள் அனைவரும் இந்து மதத்தை விட்டு வெளியேறி பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பௌத்த மார்கத்தை ஏற்ற நாளான வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி அன்று பௌத்த மார்கத்தை ஏற்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.


கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!
ஜெய்பீம்!
இங்கனம்,
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.

No comments:

Post a Comment