Tuesday, September 15, 2015

இந்திய குடியரசு கட்சியின் மாநில செயற்குழு தீர்மானங்கள் (13.09.2015)

ஜெய்பீம் !

இந்திய குடியரசு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 13.09.2015, ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் விழிமாநகரில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


1. சமுதாய மூத்த தலைவர் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் “சமுதாய விடிவெள்ளி எம்.ஜி.நாகமணி” அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக துரோகியை காவல்துறை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
2. விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் ஏவப்பட்ட ஜாதிய வன்முறையை இந்திய குடியரசு கட்சி மீண்டும் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வன்முறை குறித்து ஏற்கனவே இந்திய குடியரசு கட்சியின் சார்பில் ஒரு விளக்க அறிக்கை மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட ஆதி திராவிட மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இழப்பீடுகள் குறித்த அறிக்கை 31.08.2015 அன்று விழுப்பரம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. எனவே அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரால் எடுக்கப்பட நடவடிக்கை குறித்த விளக்கம் கோரப்பட்டது.
3. தமிழகத்தில் பெருகிவரும் ஜாதிய வன்முறைகளை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. 


4. சேஷ சமுத்திரம் ஆதி திராவிட மக்களின் இந்து மதத்தை விட்டு வெளியேறும் முடிவை இந்திய குடியரசு கட்சி வரவேற்று பாராட்டுகிறது. மேலும் அவர்களை பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நமக்கு காட்டிய பௌத்த மார்கத்தை ஏற்க இந்திய குடியரசு கட்சி அறிவுறுத்துகிறது.
5. தமிழகத்தில் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களை பாதிக்கும் மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து தமிழகம் முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
6. படித்து முடித்த ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக நீதியை முழுமையாக பாதுகாக்கும் பொருட்டு தனியார் துறையிலும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களுக்கு இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


7. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மாணவர்களின் கல்விக்காக தமிழக அரசால் 11.09.2012 ஆண்டு அன்று வெளியிட்ட அரசானை எண் 92-ன் படி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாயை தாமதிக்காமல் தமிழக அரசு உடனடியாக செலுத்தி பாதிக்கப்பட்ட SC/ST மாணவர்களின் துயரை போக்க வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
8. தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் வாழ்ந்து வரும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களுக்கு விலையில்லா வீட்டுமனை மற்றும் பட்டாவை தாமதமில்லாமல் வழங்க தமிழக அரசை இந்திய குடியரசு கட்சி கேட்டுக்கொள்கிறது.


9. தமிழகத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூடுதல் நாட்களை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்திய குடியரசு கட்சி கேட்டுக்கொள்கிறது.
10. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களின் முன்னேற்றத்திற்க்காக தமிழக அரசால் வழங்கி வந்த மானியக்கடன்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்துயரத்தை போக்கும் பொருட்டு அதே மானியக்கடன்களை தமிழக அரசு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
11. தேசிய SC/ST ஆணையம், ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களின் நலனுக்காக வழங்கி வரும் நிதியை தமிழக அரசு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின (SC/ST) மக்களுக்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
12. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் போக்கை இந்திய குடியரசு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


மேலும் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்தும் அதனை சந்திக்கும் வியுகம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சட்ட மன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் அதில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது மேலும் பாபாசாஹேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நமக்கு காட்டிய பௌத்த மத கொள்கைகளை மக்கள் அனைவரும் அறியும்படி செய்ய வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
நன்றி !
கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!
ஜெய்பீம்!
இங்கனம்,
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.

No comments:

Post a Comment