Monday, September 21, 2015

தமிழக அரசு கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் இறப்பு விசாரணையை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்

ஜெய்பீம் !

தன்னுடைய அறிவாற்றலால், விடா முயற்சியால், கடினமான உழைப்பால் இளம் வயதிலேயே அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை டி.எஸ்.பி. யாக பணியில் அமர்ந்து பெண்களின் தன்னம்பிக்கைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்த ஒரு இளம் நேர்மையான பெண் அதிகாரி டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய வழக்கான கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்களின் இறப்பு பல்வேறு கோணங்களில் பல கேள்விகளை எழுப்புகிறது. மேலும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்களின் இறப்பு குறித்து மற்றொரு காவல் துறை அதிகாரியான டி.எஸ்.பி. மகேஸ்வரியின் கருத்து தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளை நேர்மையாக வேலை செய்ய விடுவதில்லை என்பதை உறுதிபடுத்துகிறது.

எனவே தமிழக அரசு நிலைமையை கருத்தில் கொண்டு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது அறிவித்துள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையை நீக்கி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு கோகுல்ராஜ் கொலை வழக்கு மற்றும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்களின் இறப்பு குறித்து விசாரித்து உண்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டுமெனவும், தமிழக காவல்துறையில் பெண் அதிகாரிகளை துச்சமென மதிக்கும் உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காவல் துறை பெண் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை குறித்து தமிழக காவல்துறை முன்னாள் டி.ஐ.ஜி. திலகவதி அவர்களின் கருத்தை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

கற்பி! புரட்சிசெய்! ஒன்றுசேர்!
ஜெய்பீம்!
இங்கனம்,
எம்.ஜி.நாகமணி
மாநில தலைவர்
இந்திய குடியரசு கட்சி
“அண்ணலகம்”
தமிழ்நாடு.

No comments:

Post a Comment